மாஸ்டர் படத்துக்கு பிறகு தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படமான 'தளபதி 66' படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இவர் கார்த்தி மற்றும் நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதியின் 66-வது படத்துக்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்டு இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரகாஷ்ராஜ் மற்றும் நானி பெயர்களும் அடிபட்டன.
மேலும் தற்போது தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இந்தி நடிகரான விவேக் ஓபராயிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விவேக் ஓபராய் முன்னதாகவே அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் அஜித்க்கு வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.