இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய திரையில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் சூர்யா நடித்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இருப்பினும் சூர்யாவை பெரிய திரையில் காண முடியவில்லை என்ற வருத்தம் சூர்யாவின் ரசிகர்கள் இடையே இருந்தது. தற்பொழுது இந்த வருத்தத்தைப் போக்கும் விதமாக சூரியாவின் 'எதற்கும் துணிந்தவன்' படம் திரையரங்குகளில் வெளியாகி அவரது ரசிகர்களின் வருத்தத்தை கலைத்துள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. விமர்சன ரீதியாக இப்படம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது . தமிழ் சினிமா பலமுறை பார்த்து சலித்த ஒரு திரைக்கதையை இயக்கி இருக்கிறார் பாண்டிராஜ் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் போல எதற்கும் துணிந்தவன் படமும் ஒரு சீரியல் போல சென்று கொண்டிருந்தாலும், அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக தப்பித்து விட்டது. அதேபோல எதற்கும் துணிந்தவன் படமும் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்குக்கு வருவதால் எதற்கும் துணிந்தவன் படம் காப்பாற்றப்பட்டு வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் திரையரங்குகளில் வெளியிட்டது. 75 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எதற்கும் துணிந்தவன் படம் தற்போது தமிழகத்தில் முதல் நாள் வசூல் மட்டுமே 15 கோடியே 45 லட்சம் ரூபாயும், இரண்டாம் நாள் வசூலாக 13 கோடியே 75 லட்சம் ரூபாயும், மூன்றாம் நாளில் 18 கோடியே 75 லட்சம் ரூபாயும் வசூல் செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 47 கோடியே 95 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறது . மூன்று நாட்களுக்குள் இவ்வளவு வசூல் ஆகி விட்டதால் படக்குழு நிம்மதி அடைந்து இருக்கிறது .
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அந்த கருத்துக்களை மிக ஆழமாக சொல்லாமல் ஹீரோவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த படம் அமைந்துவிட்டதால் வெகுவாக இந்த படம் மக்களை ஈர்க்கவில்லை. எதற்கும் துணிந்தவன் படம் சூரியாவின் ஹாட்ரிக் வெற்றியாக இல்லாவிட்டாலும் ஆறுதல் வெற்றியாக அமையும் என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.