புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் (28) மற்றும் இவரது மனைவி ஆனந்தி (26) இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் தங்கி கூலிவேலை பார்த்து வந்தனர்.
இதுபோல் கோவில்பட்டியை சேர்ந்த முருகன் (30) , இவரது மனைவி முத்துமாரி (25) மற்றும் இவர்களது மகள் மகாகவி (3) இவர்கள் மூவரும் வடுகபாளையம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று (08/03/2022) அதிகாலை இந்த தம்பதிகள் தாராபுரம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். முருகன், முத்துமாரி மற்றும் மகாகவி ஒரு பைக்கிலும், குமரேசன், ஆனந்தி ஆகியோர் மற்றொரு பைக்கிலும் சென்று கொண்டிருந்தனர்.
அதிகாலை 4 மணி அளவில் பல்லடம் அடுத்த புத்தரச்சல் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த காய்கறி சரக்கு ஏற்றிய ஆட்டோ, பைக்குகள் மீது மோதியது. ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்ட குமரேசன், முருகன், முத்துமாரி, மகாகவி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விரைந்து வந்தனர். அங்கு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குமரேசனின் மனைவி ஆனந்தியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள். அதிகாலை நடந்த கோர விபத்தில் 3 வயது சிறுமி உள்பட 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.