தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்த எந்த நடிகரும் எந்த காரணத்திற்காகவும் அவ்வளவு எளிதில் தனது பாதையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
எடுத்துக்காட்டாக ஒரு ஹீரோ ஏதேனும் ஒரு படத்தில் ஹீரோ இல்லாமல் வேறு ஒரு கேரக்டரில் நடித்தால் அதன் பின்னர் தொடர்ந்து அதுபோன்ற வாய்ப்புகள் மட்டுமே கிடைக்குமோ என்ற பயத்தில் யாரும் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள்.
ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனி ரகம். இவர் மற்ற ஹீரோக்களில் இருந்து சற்று வித்தியாசமானவர்.
இவர் ஹீரோ மட்டுமல்லாமல் வில்லன், அப்பா என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்து அசத்தி விடுவார். அதுமட்டுமின்றி ஈகோ ஏதும் பார்க்காமல் நல்ல வலுவான கதாபாத்திரமாக அமைந்தால் அது என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நடித்து விடுவார்.
அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் இவர் வில்லனாக நடித்து அசத்தினார்.
அதனை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.
இவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படங்களில் தான் இவருக்கு நல்ல பெயரும் பாராட்டும் கிடைத்தது.
இப்பொழுது ஹீரோ விஜய் சேதுபதியை விட வில்லன் விஜய் சேதுபதிக்கு தான் அதிக டிமாண்ட் நிலவி வருகிறது.
அதன்படி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் "விக்ரம்" படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குக்கூ மற்றும் ஜோக்கர் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு மோகன் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்தப் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கார்த்திக் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த "நான் மகான் அல்ல" படத்தில் விஜய் சேதுபதி கார்த்தியின் நண்பராக ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.