இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் "மகான்" இன்று(10/02/2022) அமேசான் பிரைம் இல் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
சுதந்திர போராட்ட குடும்பத்தில் பிறக்கும் காந்தி மகான், சிறு வயதிலிருந்தே மதுவுக்கு எதிரான தீமைகளை சொல்லி வளர்க்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவரே மது விற்பனை செய்யும் சூழலுக்கு ஆளாகிறார். அவருக்கும் அவரது மகன் தாதாபாய் நௌரோஜிக்கும் இடையில் பிரச்னை வருகிறது. தனது மகனை காந்தி மகான் எப்படி சமாளித்தார் என்பதே மகான் படத்தின் கதை.
வழக்கமான கார்த்திக் சுப்புராஜ் பட பாணியில்தான் இந்தப் படமும் நகர்கிறது. தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம், சுதந்திரமே அல்ல என்ற காந்தியின் வசனத்துடன்தான் படம் துவங்குகிறது.
அப்பா - மகனுக்கு இடையேயான போட்டியில் வெல்லப்போவது யார் என்ற சுவாரசியமான ஒரு வரி கதையை வைத்து ஒரு திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
1960, 1996, 2003, 2016 பல்வேறு காலகட்டங்களில் கதை நகர்கிறது. ஒவ்வொரு கால கட்டத்தையும் நேர்த்தியாக திரையில் கொண்டு வந்தததில் கலை இயக்குநரின் பங்கு பாராட்டுக்குரியது.
காந்தி மகானாக விக்ரம், தாதா பாய் நௌரோஜியாக மகன் துருவ் விக்ரம், சத்யவானாக பாபி சிம்ஹா, நாச்சியாராக சிம்ரன், ராக்கியாக சனந்த் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை எந்த குறையும் இல்லாமல் அற்புதமாக செய்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரமுக்கு நடிப்பதற்கு கனமான வேடமாக அமைந்துள்ளது காந்திமகான் கதாபாத்திரம். விக்ரமை விமர்சிப்பவர்கள் அவர் தனது தோற்றத்தை ஒப்பனை மூலம் மாற்றிக்கொண்டு வருகிறாரே தவிர நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அவர் அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி ஒரு ருத்ர தாண்டவமே ஆடியிருக்கிறார். படத்தை நாம் 3 மணி நேரம் பார்ப்பதற்கு முக்கிய காரணம் விக்ரம் மட்டுமே .
துருவ்ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார். துருவ்வும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஆனால் அவர் மிக இளைஞராக தெரிவதால் ஐபிஎஸ் அதிகாரி வேடம் அவருக்கு பொருந்தவில்லை. இந்த ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் அவர் நம்பும்படி இல்லை.
முதல் பாதி முழுக்க மது வியாபாரத்தில் விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா எப்படி உச்சத்தை அடைகிறார்கள் என்பது காட்டப்படுகிறது. ஆங்காங்கே சுவாரசியமான காட்சிகள் இருக்கின்றன. இருவரும் தமிழ் நாட்டளவில் மது வியாபாரத்தை எப்படி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் என்பதை தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
இரண்டாம் பாதியில் துருவ்வும் விக்ரமும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் சற்று சுவாரசியம் குறைவாகவே உள்ளது. இருவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்கள். நடிகர் விக்ரம் தனது நடிப்பால் துருவ்வை காணாமல் செய்துவிடுகிறார். மகனின் மீது கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம். இரண்டாம் பாதியில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நன்றாக இருக்கின்றன. உதாரணமாக இரண்டாம் பாதியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்துகொள்ளும் விக்ரமுக்கும் சிம்ரனுக்கும் இடையிலான உரையாடல்கள் சுவாரசியமாக இருந்தன.
படத்தின் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை கைகொடுத்திருக்கிறது. மற்றும் தனது ஒளிப்பதிவின் மூலம் ஆங்காங்கே காட்சிகளை சுவாரசியப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. அவரது ஒளிப்பதிவின் மூலம் சிறப்பான காட்சி அனுபவத்தை தந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தின் சறுக்கியவர்
மகான் மூலம் மீண்டிருக்கிறார் என்று சொல்லலாம். மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை படம் பேசியிருக்கிறது. திரையரங்கில் பார்த்து ரசிக்கக் கூடிய காட்சிகள் நிறைய படத்தில் இருக்கின்றன. இந்த மகான் படத்தை நிச்சயம் ஒருமுறை ரசிக்கலாம்.