சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
அண்ணாத்த திரைப்படம் ஏகப்பட்ட நடிகர் பட்டாளத்துடன் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தீபாவளிக்கு வெளியானது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது.
தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் ரஜினிகாந்த் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். மேலும் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாக உள்ளது. கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் பட்ஜெட் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினியிடம் படத்தின் கதையை பற்றி கூறியுள்ளார். ரஜினிகாந்திற்கு நெல்சன் திலீப்குமார் கூறிய கதை பிடித்துப்போகவே பின்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளனர்.
இந்த பிரமாண்ட கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படத்தை கூடிய விரைவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்து வருகிறார்.