ஏழு வருடங்களுக்கு மேலாக கணவனுக்கு கொடுக்கும் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மனைவி.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் தலா பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் ஆஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஆரம்ப கட்டத்தில் சரியான வேலை இல்லாமல் அவதியுற்று வந்த சதீஷ் பின்பு சொந்தமாக ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில் செய்து லாபத்தை ஈட்டி வந்தார்.
கடந்த சில வருடங்களாக சதீஷ் இரவில் சாப்பிட்ட உடன் சோர்வுற்று தூங்கியுள்ளார். அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் இவ்வாறு நடக்கிறது என்று மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்று வந்தார்.
சதீஷ் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் உடலில் எந்த மாறுதல்களும் இல்லாமல் பழையபடி உடல்நலம் பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. பல வருடங்களாக சதீஷ் அதே உடல் நிலையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் சதீஷ் வீட்டில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சிறிது நாட்கள் ஹோட்டல்களில் சாப்பிட்டு வந்தார் அப்பொழுது சதீஷ் உடலில் எந்த சோர்வும் இன்றி சரியாக இருப்பதை உணர்ந்து இருக்கிறார்.
இதனையடுத்து சதீஷ் அவரது மனைவி மீது சந்தேகம் அடைந்து வீட்டின் சமையல் அறையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளார்.
அதில் சதீஸின் மனைவி அவரது உணவில் சில மாத்திரைகளை கலப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்பு வீட்டில் நடந்த விபரங்களை அவரது மனைவியின் தோழியிடம் கூறிய சதீஷ் அவரை இது குறித்து விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதில் ஆஷா தனது தோழியிடம் ஏழு வருடங்களுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் தூக்க மாத்திரையை தனது கணவரின் உணவில் கலந்து கொடுத்ததை கூறியுள்ளார். இதைக் கேட்ட ஆஷாவின் தோழி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சதீஷ் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் டார்ச்சர் செய்து வந்ததால் அவரை தன் கட்டுக்குள் வைக்க தூக்க மாத்திரையை கலந்து கொடுத்ததாகக் கூறியுள்ளார். மேலும் தனது தாயும் தனது தந்தைக்கு இவ்வாறுதான் செய்தார் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தனது தோழிக்கும் இந்த மாத்திரைகளை உன் கணவருக்கு கொடு அப்போதுதான் கணவன் நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல்களை போட்டோ வாகவும் செல்போன் உரையாடல்கள் ஆகவும் பதிவு செய்த ஆஷாவின் தோழி இதனை சதீஷிடம் பகிர்ந்துள்ளார்.
ஏழு வருடங்களுக்கு மேலாக தான் விஷம் போன்ற உணவை சாப்பிட்டு வந்ததை அறிந்து அதிர்ந்து போன சதீஷ் தன்னிடமிருந்த ஆதாரங்களை வைத்து தலா போலீசாரிடம் மனைவி ஆஷா மீது புகார் செய்தார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.